எழுத்தின் அளவு: அ+ அ- அ
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து விடுதிக்கு சென்ற பயிற்சி மருத்துவரிடம் மர்ம நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 600 மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பயின்று வருகின்றனர். இங்குள்ள மருத்துவமனைக்கு நாள்தோறும் 800க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், சுமார் 300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மருத்துவமனையில் பணி முடித்து விட்டு வளாகத்தில் உள்ள விடுதிக்கு தனியாக சென்ற பயிற்சி மருத்துவ மாணவியை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதிக்கு இருசக்கர வாகனங்கள் வருவதை அறிந்த மர்ம நபர் மாணவியை விடுவித்து தப்பி ஓடியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி விடுதிக்கு சென்று சக மாணவ, மாணவிகளிடம் சம்பவம் குறித்து கூறியதைத்தொடர்ந்து மருத்துவ மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியதுடன், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, மஞ்சள் நிற சட்டை அணிந்தவர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த சம்பவத்தை கண்டித்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் இன்று பணியை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.