எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருவள்ளூர் அருகே அரசு பேருந்து வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது இருக்கை உடைத்து முதியவருக்கு இடுப்பு எலும்பு முறிந்தது. பழைய பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அவலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்திதொகுப்பு...
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் கார்த்திகேயன். இவர் வங்கனூர் கிராமத்தில் இருந்து உறவினரை அழைத்துக் கொண்டு தடம் எண் 97 கொண்ட அரசு போக்குவரத்து கழக பேருந்தில் திருவள்ளூருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே திருப்பாச்சி பகுதிக்கு சென்றபோது, அரசு பேருந்து வேகத்தடை மீது ஏறி இறங்கியது. அப்போது கார்த்திகேயன் அமர்ந்திருந்த இருக்கை திடீரென உடைந்தது. இதில் இருக்கையின் கம்பி உடைந்து முதியவர் கார்த்திகேயனின் இடுப்பை பதம்பார்த்தது. இடுப்பு எலும்பு முறிந்த நிலையில் வலியால் துடித்த முதியவரால் சக பயணிகள் அச்சமடைந்தனர்.
இருக்கை உடைந்து முதியவர் படுகாயங்களுடன் துடித்த நிலையில், பேருந்து பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டு, சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதியவர் கார்த்திகேயனை, சக பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அரசு பேருந்தின் உடைந்த இருக்கைக்கு கயிறு கட்டி மீண்டும் எடுத்துச் சென்ற அவலமும் அரங்கேறியது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நவீன முறையிலான பேருந்தை இயக்காவிட்டாலும், மக்கள் பயன்படுத்தவே தகுதி இல்லாத பேருந்துகளை இயக்க வேண்டாம் என்பதே போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது.