சீமான் இல்லத்தை நோக்கி பேரணியாக சென்றவர்கள் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்தை முற்றுகையிட்டு, அவரது உருவ பொம்மையை எரித்த பெரியாரிய உணர்வாளர்கள் குண்டுக் கட்டாக கைது செய்யப்பட்டனர்.

தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்தை பெரியாரிய உணர்வாளர்கள் முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சீமானின் உருவ பொம்மை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து சீமானை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியும் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிட கழக செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உட்பட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஏராளமானோரை, போலீசார் குண்டு கட்டாக கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

எந்தக் கட்சியும் சாராமல் பெரியாரின் ஆதரவாளராக இங்கு திரண்டதாகவும், தொடர்ந்து தலைவர்களையும் தமிழின மக்களையும் இழிவுபடுத்தும் செயலில் சீமான் ஈடுபட்டு வருவதாகவும், இனி ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டோம் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

Night
Day