எழுத்தின் அளவு: அ+ அ- அ
தந்தை பெரியார் குறித்து சர்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டை, சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தந்தை பெரியார் கூறியதாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதனால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், சீமான் வீட்டிற்கு சென்று ஆதாரம் கேட்கப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார். இதையடுத்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர். இதற்காக முழக்கங்கள் எழுப்பியபடி அங்கு திரண்டிருந்த அந்த அமைப்பினர் அந்த வழியாக சென்ற நாம் தமிழர் கட்சியினரின் கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் கைது செய்தனர். தந்தை பெரியார் குறித்த கருத்தை சீமான் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தொடரும் என தந்தை பெரியார் திராவிட கழத்தினர் தெரிவித்தனர்.
இதனிடையே புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சீமான் இன்று பங்கேற்றார். அவரை கண்டித்து திருமண மண்டபத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழத்தினரை சுப்பையா சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு சீமானுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி உருவப்படத்தை எரித்த அவர்கள், மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.