மதுரை மாநகர் எம்.கே.புரம் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு புதிய சீருடை தைப்பதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது. சீருடைக்கு மாணவிகளிடம் அளவீடு எடுப்பதற்காக பெண்களுக்கு பதிலாக ஆண் டெய்லர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சீருடைக்கான அளவை ஆண் டெய்லர்கள் எடுப்பதற்கு மாணவிகள் தயக்கம் காட்டியுள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் அவர்களை கட்டாயப்படுத்தி ஆண் டெய்லர்கள் அளவெடுக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி ஒருவர், இதுகுறித்து மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, தனியார் பள்ளி ஆசிரியை மற்றும் 2 ஆண் டெய்லர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவிகளுக்கு நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக தகவல் பரவியுள்ளது. மாணவிகளை கட்டாயப்படுத்தி சீருடைக்கு ஆண் டெய்லர்கள் மூலம் அளவெடுத்த தனியார் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர், அந்தப் பள்ளி முன்பாக திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, தனியார் பள்ளிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி கூறியுள்ளனர். பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியை மற்றும் டெய்லர்களை கைது செய்ய வேண்டும், மாணவிகளின் சீருடை அளவெடுக்கும் பணிக்கு ஆண் டெய்லர்களை பயன்படுத்தக்கூடாது என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தினரை போலீசார் குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வாகனங்களில் ஏற்றியுள்ளனர். மதுரையில் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கான சீருடை தைக்க அளவெடுப்பதற்கு ஆண் டெய்லர்களை பயன்படுத்திய விவகாரம், பெற்றோர்கள் மத்தியிலும் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.