எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை சென்ட்ரலில் இருந்து போடிக்கு சென்று கொண்டிருந்த ரயில் மதுரை சந்திப்பில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாரந்தோறும் 3 நாட்கள் இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு காலை மதுரை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. பின்னர் 5ஆவது நடைமேடையில் இருந்து புறப்பட்டபோது திடீரென மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் உள்ள சக்கரம் தடம்புரண்டது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டதாலும், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மதுரை சந்திப்பில் தடம்புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். பின்னர் தடம்புரண்ட ரயில் பெட்டி மட்டும் தனியாக பிரித்தெடுக்கபட்டது. மற்ற ரயில்பெட்டிகள் யார்டு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து, பயணிகள் மாற்று ரயில் மூலம் போடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.