எழுத்தின் அளவு: அ+ அ- அ
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் உரிய பதிலளிக்காமல் தட்டிக் கழித்து வரும் விளம்பர திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என எச்சரித்துள்ள நீதிபதிகள், பத்து நாட்களுக்குள் பதில் அளிக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்ட வித்ய குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இன்றைய தினமும் செந்தில் பாலாஜி தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய பதிலளிக்காமல் தொடர்ந்து கால அவகாசம் கோரப்பட்டது. இதனால் கடும் கோபம் அடைந்த நீதிபதிகள், இதுபோன்ற செயலை பொறுத்துக் கொள்ள முடியாது, இந்நேரம் பதிலை நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும், அதற்கு பதிலாக இப்போது வந்து வழக்கில் உரிய நோட்டீஸ் அனுப்பப்படவில்லை என்று கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது என்று கண்டிப்புடன் கூறினர்.
ஒரு வழக்கை விசாரணைக்கு பட்டியல் இடுவது என்பது கடினமான காரியம், அப்படி இருக்கும் போது இதுபோன்று தொடர்ந்து பதில் அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம், உங்களுக்கு பத்து நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது அதற்குள் பதில் அளிக்க வேண்டும், அதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் செந்தில் பாலாஜியை எச்சரித்து விசாரணையை வரும் ஒன்பதாம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.