எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள் தெரிவிக்குமாறு செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அபய் எஸ் ஓஹா தலைமையிலான அமர்வு முன்ப இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கிய போது செந்தில்பாலாஜி அமைச்சராக இல்லை என்று தெரிவித்திருந்ததாகவும் ஆனால் ஜாமீன் கிடைத்த பின்பு அமைச்சராக பதவி ஏற்று இருப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்
ஒரு சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கிடைப்பது எவ்வளவு கடினமானது என்பது உங்களுக்கு தெரியாதா என செந்தில் பாலாஜி தரப்புக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசியல்வாதிகள் ஜாமின் கிடைத்தவுடன் அதை மீறுவதாகவும் இது ஏற்க முடியாத ஒன்று என்றும் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை இது சாதாரணமானது இல்லை என்று கூறிய நீதிபதிகள், அமைச்சராக இல்லை என்று கூறியதன் அடிப்படையில் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் ஜாமீன் வழங்கிய சில நாட்களுக்குள் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து அவர் மீண்டும் அமைச்சராகிறார் என்று கூறிய நீதிபதிகள், இது நீதிமன்றத்தை நீங்கள் கையாளும் முறை அல்ல என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்பதை திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.