சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருப்பதன் மூலம், பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என்ற உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து செந்தில் பாலாஜி பதவி விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டபேரவையில் உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக, சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மசோதாவை தாக்கல் செய்வார் என்று நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்திருப்பதுதான் பேசு பொருளாகியிருக்கிறது.
சட்டவிரோத பண மோசடி வழக்கில் ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என முடிவு செய்து, திங்கள் கிழமை தெரிவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியது.
இந்தநிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்யலாம் என்றும், அவ்வாறு நேர்ந்தால் இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா மீது விவாதம் நடைபெற்றால், செந்தில் பாலாஜியால் பதிலளிக்க முடியாது என்பதால், மாற்று ஏற்பாடாக அமைச்சர் ரகுபதி, மசோதாவை தாக்கல் செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.