எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் இன்று முதல் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் தொடங்கியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையே சாதாரண மின்சார ரயில்கள் இயக்கப்பட்ட வந்த நிலையில், இன்று முதல் 14 பெட்டிகள் கொண்ட குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் தொடங்கப்பட்டுள்ளது.
முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்டு அமைக்கப்பட்ட ரயில் என்பதால் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது தவிர்க்கப்படும். இந்த ரயிலில் தானியங்கி தகவுகள், கண்காணிப்பு கேமரா, பயணிகள் தகவல் அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் ரயில் காலை 8.35-க்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு காலை 10.30-க்கு சென்னை கடற்கரை வந்தடையும். இதையடுத்து மாலை 3.45 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு மாலை 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15-க்கு சென்னை கடற்கரை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன மின்சார ரயில் பயணத்திற்கு குறைந்தபட்சமாக 35 ரூபாயும், அதிகபட்சமாக 105 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.