எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வங்ககடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு - இலங்கை இடையிலான கடற்கரையை நெருங்கும் என தெரிவித்தார். காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாடு நோக்கி நகர்வதால் டெல்டா பகுதிளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்காரணமாக கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.