எழுத்தின் அளவு: அ+ அ- அ
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்டை மாநிலமான ஆந்திராவில் லேசான மாற்றுத்திறனாளிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய், கடுமையான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய், முதுகு தண்டுவடம் பாதித்து படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 15 ஆயிரம் ரூபாயும் மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இதேப் போன்று தமிழக அரசும் வழங்க வேண்டுமென தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள ஆர்டிஓ அலுவலக வளாகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய உதவித்தொகையை உயர்த்த கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களின் கோரிக்கையை முன் வைத்தனர். இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதே போன்று, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராகவும், மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே கோரிக்கைகளை முன்வைத்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி, விளம்பர திமுக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை போன்றே தமிழக அரசும் வழங்க வேண்டுமென வேலூர் அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.