சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த குற்றவாளியை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை அண்ணா நகரில் உள்ள ஆச்சி குளோபல் பள்ளி, கோபாலபுரத்தில் உள்ள டி.ஏ.வி. பள்ளி, கே.கே.நகரில் உள்ள PSBB பள்ளி உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, மோப்பநாய் உதவியுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து தகவல் பரவியதால் அச்சமடைந்த பெற்றொர் பள்ளிகளுக்கு படையெடுத்து, குழந்தைகளை அவசர அவசரமாக வீடுகளுக்கு அழைத்து சென்றனர். இதனால் பள்ளி வளாகங்களில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.  

ஒரே நேரத்தில் பல்வேறு பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், 2 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை சில நிமிடங்களில் வெடிக்ககூடும் எனவும் குறிப்பிடப்பட்டது. இதனை நகைச்சுவையாக எண்ணி விட வேண்டாம் எனவும், மின்னஞ்சலில் மர்மநபர் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே, பெற்றோர் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றவாளி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பள்ளிக்கு வந்து குழந்தைகளை அழைத்துசெல்லுமாறு பெற்றோர்களின் செல்போன் எண்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனையடுத்து குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்ல பள்ளிகளில் பெற்றோர்கள் குவிந்ததால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. 

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது வதந்தி எனவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாமென தெரிவித்துள்ளார். சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் கூறினார்.

Night
Day