சென்னையில் 21 கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் 21 கால்வாய்களை 86 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க மாநகராட்சி சார்பில் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிட்டும், பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதால் அசோக் நகர், ஜாபர்கான் பேட்டை, தி.நகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது, ஒட்டு மொத்த சென்னையும் வெள்ளத்தில் தத்தளித்தது. வழக்கமாக, சென்னைக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெருமழையாக பெய்யும். அச்சமயம், சென்னையில் இருக்கக்கூடிய நீர்நிலைகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.  

இதனை தடுக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருக்கக்கூடிய 150-க்கும் மேற்பட்ட கால்வாய்களை தூர்வாரி, அதனை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம், ஆனால் இந்த ஆண்டு பெரும்பாலான கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில் வியாசர்பாடியில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாய், அம்பத்தூர் நொளம்பூர் கால்வாய், எம்.ஜி.ஆர் கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் நிதியிலிருந்து 86 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது. ஆனால் கால்வாய்கள் சீரமைப்பதற்காக அறிவிப்பு வெளியிட்டு ஒரு வருடம் நெருங்கியும் இதுவரை எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 
 
சென்னை எம்.ஜி.ஆர் நகர், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை ஆகியவை தாழ்வான பகுதிகளாக உள்ள நிலையில், கடந்த தேர்தலின் போது திமுகவினர் எம்.ஜி.ஆர் நகர் கால்வாயை சீரமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால், தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஒவ்வொரு வருடமும் மழை வெள்ளத்தில் சிக்கி கடும் துயரங்களை சந்தித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதேபோல் தி. நகர், நந்தனம் கால்வாய், ராஜ் பவன் கால்வாய் ஆகியவையும் சீரமைக்கப்படாததால், இந்த ஆண்டு சென்னை நகர் பகுதிகளில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால், கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் பருவமழையின் போது நகரின் பெரும்பாலான பகுதிகள் மழையில் மூழ்கும் அபாயம் உள்ளதாக சென்னை வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். 



Night
Day