எழுத்தின் அளவு: அ+ அ- அ
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நங்கூரமிட்ட நிலையில், மணிக்கு 2 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நள்ளிரவு முதல் ஒரே இடத்தில் நங்கூரமிட்டு நின்றது. தற்போது மணிக்கு 2 கிலோமீட்டர் வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகைக்கு 320 கிலோமீட்டர் தென் கிழக்கிலும், திரிகோணமலைக்கு 100 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கிலும் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து 410 கிலோமீட்டர் தென் கிழக்கிலும், சென்னைக்கு 490 கிலோமீட்டர் தெற்கு தென்கிழக்கில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. இது, வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஓரிரு மணி நேரங்களில் புயலாக வலுப்பெறும் என்றும், தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வட தமிழ்நாடு – புதுச்சேரி கடற்கரை பகுதிகளில், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்போது 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.