எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 5 வயது குழந்தையை தடை செய்யப்பட்ட ராட்விலர் இன நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக நாய்களின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்ததால், கடந்த மார்ச் மாதம் 23 வகையான ஆபத்தான வெளிநாட்டு நாயினங்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் மத்திய அரசு தடை விதித்தது. அதில் ராட்விலர் இன நாயும் ஒன்று.
இந்நிலையில், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் நேற்று 2 ராட்விலர் இன நாய்கள் 5 வயது குழந்தையை கடித்து குதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரம் விளக்கு மாடல்பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக வேலை பார்க்கும் ரகு என்பவர், மனைவி மற்றும் 5 வயது மகள் சுதக்ஷாவுடன் பூங்காவில் உள்ள சிறு அறையில் வசித்துள்ளார். உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்காக காவலாளி ரகு விழுப்புரம் சென்ற நிலையில் தாய் மற்றும் மகள் மட்டும் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் பூங்கா அருகே வசிக்கக்கூடிய புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் 2 ராட்விலர் நாய்களுடன் பூங்காவுக்கு சென்றுள்ளார்.
தடை செய்யப்பட்ட இன நாய்களை கயிறு கட்டாமலும், வாய்க்கவசம் எதுவும் அணிவிக்காமலும் ஆபத்தான வகையில் அழைத்து சென்றதால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தை சுதக்ஷாவை இரு நாய்களும் கடித்து குதறியுள்ளன. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த தாய், குழந்தை சுதக்ஷாவை மீட்க முயன்றபோது அவரையும் நாய்கள் கடித்துள்ளன. ஆனால் உரிமையாளர் புகழேந்தி, நாய்களை அப்படியே விட்டு சென்றதை அடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அக்குழந்தை மேல்சிகிச்சைக்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையை ராட்விலர் நாய்கள் கடித்து குதறியபோது உரிமையாளர் வேடிக்கை பார்த்ததாகவும், உதவி செய்யக்கூட வரவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆயிரம் விளக்கு போலீசார் நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவருடைய மனைவி வரலட்சுமி மற்றும் மகன் வெங்கடேஷன் ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிறரை கடித்து அல்லது தீங்கு விளைவித்தல் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து விளைவித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்தனர்.