சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நியமனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கே.ஆர் ஸ்ரீராமை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிப்பதற்கு முன்பே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, மும்பை உயர்நீதிமன்ற 2வது மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை நியமிக்க ஜூலை 12ம் தேதி கொலிஜ்யம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே. ஆர். ஸ்ரீ ராமை நியமித்துக் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்த நீதிபதி கே.ஆர் ஸ்ரீராமின் முழு பெயர் கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் ஆகும். மும்பை பல்கலைக்கழகத்தில் நிதி கணக்கியல் துறையில் பிகாம் மற்றும் எல்.எல்.பி முடித்துள்ளார் நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம். லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் எல்.எல்.எம் முடித்துள்ள அவர், 1986ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் கோவா மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து நீதித்துறையில் பணியை தொடங்கினார். 

கப்பல் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞராக வலம் வந்த நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம், மும்பை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.வெங்கடேஸ்வரனிடம் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார். வழக்கறிஞராக பணியாற்றிய காலகட்டத்தில் நுகர்வோர் விவகாரங்கள், சுங்கத்துறை, கலால் மற்றும் சேவை வரி உள்ளிட்ட வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதிட்டுள்ளார்.

நீதித்துறை மீதான ஈர்ப்பு மட்டுமின்றி சமூகத்திலும் மிகுந்த அக்கறை கொண்ட நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், தர்மிஷ்டா மித்ரன் எனும் தனியார் தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கோல்ப்ஃ விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட நீதிபதி ஸ்ரீராம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்

கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நியமனம் செய்யப்பட்டார். 2016 மார்ச் 2ம் தேதி மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும், அவர் நியமனம் செய்யப்பட்டார். 9 ஆண்டுகள் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியுள்ள நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம், தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.ஆர். ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்

Night
Day