சென்னை கிண்டி அரசு உயர் சிகிச்சை மருத்துவமனையில் மின்தடை... அவசர பிரிவு நோயாளிகள் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிண்டி அரசு உயர் சிகிச்சை மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. இதன்காரணமாக அவசர பிரிவில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் கிண்டி அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அச்ச உணர்வுடன் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ளது அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை. இங்கு சுமார் 400-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு சனிக்கிழமை இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் ஏற்பட்ட மின் தடை 2 மணி நேரத்திற்கு நீடித்ததால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

ஏழை எளிய மக்களுக்கு தகுந்த வகையில் அரசு மருத்துவமனை இருக்கும் என நம்பி தான் இங்கு பலரும் வந்து செல்வதாகவும், இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் மோசமான நிலையை எடுத்துக்காட்டுகிறது எனவும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

திருப்பத்தூரில் இருந்து வந்திருந்த நோயாளியின் உறவினர் தெரிவிக்கையில், தன்னுடைய மாமனார் அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், அவர் இருக்கக்கூடிய அறையில் ஏற்பட்ட மின்தடையால் சிரமப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதனிடையே மின்தடை ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாகு, மருத்துவமனையை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மருத்துவமனைக்கு டிரான்ஸ்பார்மரில் இருந்து மின்சாரத்தை செலுத்தும் மின்கம்பி எரிந்ததால், மின் தடை ஏற்பட்டதாக விளக்கமளித்தார்.

ஜெனரேட்டர் வயர் எரிந்ததாலும் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து மின்சாரம் வழங்க முடியாத நிலை உருவான நிலையில், நோயாளிகள் மற்றும் உடன் வந்திருந்தவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

கிண்டி அரசு மருத்துவமனை பிரச்னைகளிலும், சர்ச்சைகளிலும் சிக்குவது இதுமுதல்முறையல்ல.. ஏற்கெனவே கடந்த புதன் கிழமை விக்னேஷ் என்ற இளைஞர், மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியது தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வயிற்று வலி காரணமாக கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

தொடர்ந்து சனிக்கிழமை இரவு மின்தடை ஏற்பட்டு நோயாளிகள் அவதியடைந்த சம்பவம் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவர் மீது கத்தி குத்து, மின்தடை போன்று தொடர் சர்ச்சைகளில் கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனை சிக்கி வருவதால், நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் அச்சத்துடனே தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Night
Day