எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் திடீரென விரிசல் ஏற்பட்டதால் ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்ததால் பரபரப்பு நிலவியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் என்பது 10 தளங்கள் கொண்ட கட்டிடமாக செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் அரசு துறை சார்ந்த அனைத்து துறை செயலாளர்கள் அலுவலகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை தரைத்தளத்தில் உள்ள டைல்ஸ் மற்றும் கட்டிடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள் நிலஅதிர்வு ஏற்பட்டதாக அஞ்சி அனைவரும் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தனர். தரைத்தளம் மட்டுமின்றி 10 தளங்களிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
அச்சத்தின் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் ஊழியர்கள் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு உள்ளே செல்லாமல் வெளியிலேயே நின்றனர். இந்நிலையில் அங்கு வந்த காவல்துறையினர் நிலஅதிர்வு ஏதும் ஏற்படவில்லை, பூகம்பம் அது வெறும் புரளி என கூறியதால் ஊழியர்கள் மீண்டும் அலுவலகங்களுக்குச் சென்றனர். நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு நிலவியது.