சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சார்பில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சார்பில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2 மணிநேரம் நடைபெற உள்ள இந்த சாகச நிகழ்ச்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் இன்று பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் நிகழ்வில் பல்வேறு வகையில் 72 விமானங்கள் வான் சாகசங்களில் ஈடுபடவுள்ளன. இதில், வானில் குட்டிக்கரணம் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா குழு, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் குழு, வான் நடனத்தில் ஈடுபடக் கூடிய சாரங் ஹெலிகாப்டர் குழு ஆகியவை பங்கேற்கின்றன. மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்து வகை விமானங்களும் பங்கேற்க உள்ளன. இந்த நிகழ்வில் விமான சாகச குழுக்களுக்கு பாண்டியா, சோழா, பல்லவா, கலாம் உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 

21 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த வான் சாகச நிகழ்ச்சியை காண 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் ஆயிரத்து 500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகளும், மினி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. 

காமராஜர் சாலை, காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், பாஸ் இல்லாத வாகன ஓட்டிகள் பார்க்கிங் செய்ய ஆர்.கே.சாலைக்குப் பதிலாக வாலாஜா சாலையைப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸ் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, சர்தார் படேல் சாலை - காந்தி மண்டபம் வழியாக அண்ணா சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, கதீட்ரல் சாலை, வாலாஜா சாலையில் வணிக வாகனங்கள் செல்ல காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, நாளை மறுதினம் தாம்பரம் விமானப்படை தளத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day