சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவுகள் தொடங்கியது. ஏப்ரல் 11,12,13 ஆகிய தேதிகளில் காவலர்கள் தபால் வாக்கு செலுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. அதன்படி பேசின்பாலம் அருகே உள்ள வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும், செனாய் நகரில் உள்ள வட்டார போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்திலும், அடையாறில் உள்ள வட்டார துணை ஆணையர் அலுவலகத்திலும் வாக்குகள் செலுத்தலாம் என அறிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் இன்று தங்களின் தபால் வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்ட 3 ஆயிரத்து 416 போலீசார், இன்று அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்கு பதிவுகளை ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆண், பெண் காவலர்கள் ஆயிரத்து 908 பேர், நீண்ட வரிசையில் நின்று தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்து தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர். இதேபோன்று ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் 2 ஆயிரத்து 103 காவல்துறையினர் நாளை தங்களது வாக்குகளை பதிவு செய்யவுள்ளனர். 

வேலூரில் உள்ள நேதாஜி விளையாட்டு மைதானத்தில், காவல்துறையினர்,
சிறப்பு காவல் படைப்பிரிவினர் மற்றும் ஊர் காவல் படை பிரிவினர் தபால் வாக்குகள் செலுத்தும் பணி இன்று நடைபெற்றது. 

தென்காசி மாவட்டத்தில் வயது மூத்தோரின் இருப்பிடத்திற்கு சென்று தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது மூத்தோரின் வாக்குகளை இருப்பிடத்திற்கே சென்று சேகரிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது. இதன்படி மாவட்டம் முழுவதும் 94 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 132 முதியவர்களிடம் வாக்குகள் பெறப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் ஆய்வு செய்தார். வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை, ஆரணி ஆகிய தொகுதிக்குட்பட்ட தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வெளிமாநில காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவுகள் தொடங்கியது. வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலையொட்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் வாக்குகள் பெறப்பட்டு வரும் நிலையில், தற்போது வெளி மாநில காவலர்களுக்கான வாக்குப்பதிவு பணிகள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது.

Night
Day