செல்லா காசுக்கு பிரியாணி - இழுத்து மூடப்பட்ட கடை 05-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

பழைய நாணயங்களில் ஏதேனும் ஒன்று கொடுத்தால் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் பிரியாணி கடை முன்பு பெருந்திரளான மக்கள் திரண்டனர். கடை திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மூடப்பட்டதால் பிரியாணி பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர். 

கட்டுக்கடங்காத பிரியாணி பிரியர்களால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, மூடப்பட்ட கடையின் காட்சிகள்தான் இவை...

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோவில் அருகே ஆர் - ரஹ்மான் திண்டுக்கல் பிரியாணி என்ற பெயரில் இயங்கி வரும் கடையை பிரபலப்படுத்த நினைத்த அதன் உரிமையாளர் கவர்ச்சிகர விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். 

அதில் ஆர் - ரஹ்மான் திண்டுக்கல் பிரியாணி கடையில், மூன்று நாட்கள் உணவு திருவிழா நடைபெறுவதாகவும், 3ம் தேதி ஒரு புரோட்டா 5 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் 4ம் தேதி ஒருநாள் மட்டும் ஒரு பைசா, இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்து பைசா போன்ற பழைய நாணயங்களில் ஏதேனும் ஒன்றை கொடுத்தால், ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என குளித்தலை முழுவதும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. 

இந்த அறிவிப்பை கண்ட பொதுமக்கள், கையில் கிடைத்த செல்லா காசுகளை எடுத்து கொண்டு எப்படியாவது பிரியாணியை வாங்கி சுவைத்திட வேண்டும் என்ற நினைப்பில் கடை முன்பு குவியத் தொடங்கினர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடை முன் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்திவிட்டு, கடையை இழுத்து மூடினர்.

பிரியாணி கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பிரியாணி பிரியர்கள், பழைய நாணயங்களுடன்,  காலை 9 மணி முதல் காத்திருந்தததாகவும், பிரியாணி கடைக்கு விளம்பரம் செய்த கடை உரிமையாளர், அதற்கு முறையாக ஏற்பாடு செய்யாததாலேயே, இந்த நிலை ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

முறையான ஏற்பாடு செய்யாமல், கடையை பிரபலப்படுத்த நினைத்து, விளம்பரத்தால் இழுத்து மூடப்பட்ட கடையால் பெரும் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் பிரியாணி கடை உரிமையாளர். 

பழைய நாணயங்களுக்கு ஒரு சிக்கன் பிரியாணி என்ற விளம்பரமும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட கூட்ட நெரிசலும், அதனால் இழுத்து மூடப்பட்ட கடையாலும், குளித்தலை நகரமே பரபரப்பாக காணப்பட்டது.

Night
Day