சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர்களை விடுவித்த உத்தரவு ரத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2006 முதல் 2011 வரை திமுக தலைமையிலான ஆட்சியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர். இந்நிலையில், 2012ம் ஆண்டு இரு அமைச்சர்கள் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால் இரு அமைச்சர்களும், அவர்களது மனைவிகளும் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் விடுவிக்கப்பட்டனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் இந்த வழக்குகளில் இறுதி விசாரணை நடைபெற்ற நிலையில், அமைச்சர்கள் தரப்பிலும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்ததை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார். 

இந்நிலையில், அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சொத்துகுவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வரும் 9ம் தேதி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனும், 11ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசுவும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Night
Day