சொத்து பிரச்சனையில் தந்தையை கார் ஏற்றிக் கொன்ற மகன் கைது - போலீசார் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சொத்துக்காக தந்தையையே மகன் கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆலந்தா கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருக்கு சின்னதுரை என்ற மகனும், ஐந்து மகள்களும் உள்ளனர். அதே கிராமத்தில் கருப்பசாமிக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. இந்நிலையில் இவரது மகன் சின்னதுரை சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்தி கொண்டு ஊதாரியாக சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. மேலும், பல பெண்களிடமும் தகாத பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மகனின் எதிர்காலத்தை எண்ணி வருந்திய கருப்பசாமி, விவசாய நிலத்தின் ஒரு பகுதியை அதாவது 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை விற்பனை செய்துள்ளார். சின்னதுரையிடம் பணத்தை கொடுத்தால் விரயமாக்கி விடுவார் என நினைத்த கருப்பசாமி, மகன் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். இதனையறிந்து ஆத்திரமடைந்த சின்னதுரை, தந்தை கருப்பசாமியுடன் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள் கிழமை காலை தந்தை கருப்பசாமி தோட்டத்திற்கு செல்வதை கவனித்த சின்னதுரை, டாட்டா சுமோ காரில் பின் தொடர்ந்து சென்றுள்ளார். செல்லும் வழியில் இறக்கமின்றி தந்தை மீது காரை ஏற்றிவிட்டு சின்னதுரை தப்பியோடியுள்ளார். 

கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து கிடப்பதை கண்ட அருங்கிருந்த பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கருப்பசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த புளியம்பட்டி காவல்துறையினர் தந்தையை கார் ஏற்றி கொலை செய்த மகன் சின்னதுரையை கைது செய்தனர். 

சொத்துக்காக தந்தையை மகனே கார் ஏற்றி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

varient
Night
Day