சொந்த ஆதாயத்திற்காக கால்வாய் ஆக்கிரமிப்பு... திமுக ஊராட்சி மன்ற தலைவர் அராஜகம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியின் நீர்வரத்து கால்வாயில், திமுக ஊராட்சி மன்ற தலைவர் தனது சொந்த ஆதாயத்திற்காக அரசு அனுமதியின்றி பள்ளம் தோண்டியுள்ளார். மேலும் பழமை வாய்ந்த பனைமரங்களையும் வேரோடு அகற்றியுள்ளார். இதனால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... 

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அருகே கருந்துவாம்பாடி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 110 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த ஏரிக்கு 3 நீர்வரத்து கால்வாய்கள் இருந்த நிலையில், ஏற்கனவே 2 கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன. இதனால் மீதமிருந்த ஒரே ஒரு நீர்வரத்து கால்வாயை பயன்படுத்தி விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். 

இதனிடையே, கருந்துவாம்பாடி திமுக ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு சொந்தமாக ஏரிக்கு அருகே உள்ள 4 ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் வேண்டும் என்பதற்காக, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி கால்வாயை தனிப்பட்ட முறையில் தோண்டியுள்ளார். கால்வாயை முறையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழ்ச்செல்வன் தனது நிலத்திற்கு மட்டுமே பயன்பெறும் வகையில் கால்வாயில் இருந்து மாற்றுப்பாதையில் பள்ளம் தோண்டியுள்ளார். 

இதனால் மற்ற விளைநிலங்களுக்கு நீர் எடுக்க முடியாது என்றும், மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் தேங்கும் மழைநீர் வடிய முடியாத நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல் அப்பகுதியில் இருந்த 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 20க்கும் மேற்பட்ட பனைமரங்களையும் வேரோடு அகற்றியுள்ளார். பனை மரங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படும் சூழலில், ஆளும் கட்சியினரே அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்று செயல்படுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

கால்வாய் ஆக்கிரமிப்பு குறித்து தங்களுக்கு தகவல் வந்துள்ளது என்றும், திமுக ஊராட்சி மன்ற தலைவர் முன் அனுமதி பெறாமல் இதுபோன்று பணியை மேற்கொண்டுள்ளார் என்றும் கருந்துவாம்பாடி வருவாய் ஆய்வாளர் கணேசன் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர் ஹரிஹரன் தெரிவித்துள்ளனர். மேலும், நேரில் சென்று இடத்தை அளந்தபின் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

திமுக ஊராட்சி மன்ற தலைவரின் செயலால் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படும் நிலையில், அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Night
Day