சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு படையெடுத்ததால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு புறப்பட்டதால், கடும் போக்குவரத்து நெரிசலும், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டமும் அலைமோதியது. 

பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையில் இருந்து ஏராளமான வெளியூர்வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில், விடுமுறைக்கு சென்ற மக்கள் மீண்டும் சென்னையை நோக்கி படையெடுத்தனர். இதன்காரணமாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச் சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், கிளாம்பாக்கம் பெருங்களத்தூர், ஆகிய பகுதிகளில் சென்ற அதிக அளவு வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக வாகனங்கள் சாலையில் மெல்ல நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. 

தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி புறப்பட்டதால் விழுப்புரம் மாவட்டம் பிடாகம் மேம்பாலம், ஜானகிபுரம் மேம்பாலம், விழுப்புரம் புறவழிச்சாலை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கார், வேன், பேருந்து, லாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நின்றன. வாகனங்கள் மெல்ல நகர்ந்து சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். காவல்துறையினரும் ஆங்காங்கே நின்று கொண்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டும், நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். 

சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் குவிந்த மக்களால் கூட்டம் அலைமோதியது. போதிய பேருந்துகள் இயக்கப்படாதால் வெளியூர் செல்வதற்காக காத்திருந்த பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும், நீண்ட நேரம் பேருந்து நிலையத்திலேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர். 

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் தங்கள் குடும்பத்தினருடன் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். திருச்சி மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகளிலும், தூத்துக்குடி சாயல்குடி போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகளிலும் கடுமையான கூட்ட நெரிசல் காணப்பட்டது. தமிழக அரசு பண்டிகைக்கால சிறப்பு பேருந்துகளை முறையாக இயக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும் வெளியூர் செல்ல குவிந்த பயணிகளால் கூட்டம் அலைமோதியது. முக்கிய ஊர்களுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டதால் ஏராளமானோர் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நுழைந்த சில வினாடிகளில், மக்கள் முண்டியடித்துக் கொண்டு பேருந்துகளில் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 





Night
Day