எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்சியில் உள்ள அமைச்சர் கே என் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி தில்லை நகர் 5வது குறுக்கு தெருவில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் வீட்டில் மூன்று கார்களில் வந்த அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை உயர் அதிகாரி இருவர் தலைமையில், திருச்சி அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மசக்காளிபாளையம் பகுதியில் அமைச்சர் நேருவின் சகோதரரும், TVH உரிமையாளருமான மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவருடைய கட்டுமான நிறுவனம் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உட்பட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இது தவிர சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோவையில் உள்ள TVH நிறுவனத்தை மணிவண்ணன் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.