எழுத்தின் அளவு: அ+ அ- அ
மர்மமான முறையில் உயிரிழந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமாரின் உடல், இறுதி அஞ்சலிக்கு பின், அவரது சொந்த ஊரான கரைசுத்து புதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் உள்ளிட்டோர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம், மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இந்தநிலையில்தான் கடந்த வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர், அவரது வீட்டருகே இருந்த தோட்டத்தில், எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது.
கே.பி.கே. ஜெயக்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது உயிரிழப்பிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் விளக்கமளித்திருந்தார்.
இதனிடையே அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வீடியோ பதிவுடன் கூடிய பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திசையன்விளை அருகே உள்ள சொந்த ஊரான கரைசுத்துப்புதூருக்கு கே.பி.கே. ஜெயக்குமாரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக ஜெயக்குமாரின் உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, கே.பி.கே. ஜெயக்குமார் உயிரிழந்த சம்பவத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வெளிப்படையான விசாரணையை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரது மரணத்திற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பெயர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சி வெளிப்படையான விசாரணைக்கு வலியுறுத்தும் பட்சத்தில், பாஜக இதில் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சியின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடுவதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இறுதி அஞ்சலிக்கு பின், ஜெயக்குமாரின் சொந்த ஊரான கரைசுத்து புதூரில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.