சென்னையில் ஜெயா ப்ளஸ் செய்தியாளர் மீது காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் தாக்குதல் நடத்திய சம்பவம் சக செய்தியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருபவர் செல்வ சூரியன். இவர் நேற்று இரவு பணி முடிந்து, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள காசி திரையரங்கம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குமரன் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், செய்தியாளர் செல்வ சூரியனை அழைத்து போதையில் மிரட்டும் தொனியில் விசாரணை செய்துள்ளார். அப்போது, செல்வ சூரியன் தாம் ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். அதனை கேட்டு ஆவேசமடைந்த காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், செய்தியாளர் என்றால் பயந்து விடுவோமா எனக் கூறி, தகாத வார்த்தைகளால் பேசி, செய்தியாளர் செல்வ சூரியனை தாக்கி, அவரது செல்போனையும் பறித்துள்ளார்.
இதனிடையே தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற மற்ற செய்தியாளர்களை பார்த்து காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், நீங்கள் போதை ஊசி பயன்படுத்துபவர் தானே, அதனால்தான் உடல் மெலிந்து கண்ணம் சுருங்கியவாறு ஒல்லியான தோற்றத்தில் இருக்கிறீர்கள் எனவும் உருவ கேலி செய்துள்ளார்.
அதே வேளையில் செய்தியாளரை பார்த்து யார் நீ ? என மிரட்டியவாறு கேள்வி கேட்ட காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், பணி நேரத்தில் மது அருந்தி போதையில் தள்ளாடினார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஜெயா ப்ளஸ் செய்தியாளர் செல்வ சூரியன், தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, R6 குமரன் நகர் காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் அமுதாவிடம் புகார் அளித்துள்ளார்.