எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை சாலிகிராமத்தில் கட்டப்பட்டுள்ள ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர் குடியிருப்புகளை உடனடியாக இடிக்க வேண்டும் என ஐஐடி பேராசிரியர்கள் குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் அங்கு வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ளது ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர் அடுக்குமாடி குடியிருப்பு. ஜெயின் ஹோம்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளில் சுமார் 630 வீடுகள் உள்ளன.
2016ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடுகளில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். சதுர அடிக்கு ஏற்றவாறு ஒரு வீடு ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீடு வாங்கிய இரண்டே ஆண்டுகளில் வீட்டின் பல்வேறு பகுதிகளில் கைப்பிடி சுவர்கள் முதல் மேல் சுவர் வரை ஆங்காங்கே அவ்வப்போது சரிந்து விழுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இருப்பினும் வேறு வழியில்லாததால் தாங்களாகவே அவற்றை சரிசெய்து கொண்டு வசித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ஐஐடி பேராசிரியர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து அறிக்கை தரும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. இதை அடுத்து ஐஐடி பேராசிரியர்கள் குழுவினர் அந்த கட்டிடத்தை ஆய்வு செய்து தற்போது அறிக்கை தயார் செய்துள்ளனர். அந்த அறிக்கையில், கட்டுமானத்திற்கு பயன்படுத்திய உபகரணங்கள் தரம் இல்லாதவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் இந்த வீடுகள் வசிப்பதற்கு உகந்தவை அல்ல என்றும் 17 மாடி கட்டிடத்தையும் இடித்து தள்ளிவிட்டு மாற்று வீடு கட்டலாமே தவிர, இவற்றை செப்பனிட்டு மீண்டும் புதுப்பிப்பது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர் குடியிருப்பு முழுவதுமே ஆங்காங்கே மேல் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதால் அன்றாடம் அச்சத்துடனேயே வசித்து வருவதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கோடி ரூபாய் முதலீடு செய்து வீடு வாங்கியுள்ள நிலையில் தற்போது அவற்றை இடிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், குடியிருப்புவாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.