எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் மீது 15 க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் சென்னை கோட்டூர்புரம் மண்டபம் தெரு பகுதியில் உள்ள நடைபாதையில் பிரியாணிக் கடை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி பிரியாணி கடையில் விற்பனை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்ற ஞானசேகரன், அங்கு தனிமையில் இருந்த காதலர்களை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். பின்பு அந்த பதிவை காட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிடுதாக கூறி மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தசதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஞானசேகரனை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் ஞானசேகரன் மீது கோட்டூர்புரம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும், குறிப்பாக கடந்த 2011ஆம் ஆண்டும் இதே பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கைதாகி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீரென இடது கால் மற்றும் இடது கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டது. ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை இன்று நீதிபதி முன் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது ஜனவரி 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.