ஞானசேகரன் வீட்டில் சோதனை - முக்கிய ஆவணங்கள், லேப்டாப் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதான திமுக பிரமுகர் ஞானசேகரனின் சொத்து ஆவணங்கள் மற்றும் லேப்டாப்பை கைப்பற்றிய சிறப்பு புலனாய்வு குழுவினர் அவரது வீட்டில் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டு பெட்டி பெட்டியாக ஆவணங்களை கொண்டு சென்றனர்.

திமுக பிரமுகர் ஞானசேகரன் கொள்ளையடித்த பணத்தில், தனது சொந்த ஊரான உத்திரமேரூரில் மூன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் பண்ணை வீடு அமைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு ஞானசேகரன் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரிய வந்துள்ளது. பின்னர், திமுகவில் பதவி வாங்கிய ஞானசேகரன் கோட்டூர் புரத்தில் தனது ராஜாங்கத்தை காட்டி வந்துள்ளார். மேலும், கொள்ளையடித்த பணத்தை வைத்து, விலை உயர்ந்த கார், நகைகள் என வாங்கி அவர் சொகுசு வாழ்க்கை வாழ்க்கை வாழ்ந்தும் தெரியவந்துள்ளது. இதேபோல், 20-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட  ஞானசேகரன், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் 53 சவரன் நகைகள் திருடிய வழக்கில் தண்டனை பெற்றதும் தெரிய வந்துள்ளது. காவல்துறையினர் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக மிளகாய் பொடியை கொள்ளையடித்த வீடு முழுவதும் தூவி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட புலனாய்வுத்துறையினர், பல்வேறு சொத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் கைப்பற்றினர். முக்கியமாக ஞானசேகரன் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்ய உபயோகப்படுத்திய லேப்டாப்பை கைப்பற்றி புலனாய்வு அமைப்பினர், அவரை ஆய்வு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஞானசேகரனுக்கு எதிராக பல முக்கிய ஆதாரங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திமுக பிரமுகரான ஞானசேகரன் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளது. ஆளும் கட்சியினர் துணையோடு மேலும் பல சட்டவிரோத செயல்களை இவர் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மேலும் பல மாணவிகள் ஞானசேகரனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், பாதிக்கப்பட்ட மாணவிகள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர்ந்து 10 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டு பெட்டி பெட்டியாக ஆவணங்களை கொண்டு சென்றனர்.  

Night
Day