எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக தடையையும் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி மேற்கொண்டனர். அவர்களை வெள்ளரிப்பட்டி பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக வேதாந்தா நிறுவனத்திற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக மேலூர் முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று நரசிங்கம்பட்டி பெருமாள் கோவிலில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பேரணியாக சென்று மதுரை தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார், தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், நரசிங்கம்பட்டியில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான விவசாயிகள், தடையையும் மீறி தல்லாகுளம் தலைமை தபால் நிலையம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். வாகனங்கள் மூலமாகவும், நடைபயணமாகவும் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்ற விவசாயிகள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.