டாஸ்மாக் ஊழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள்
தலைமை அலுவலகத்தில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனைக்குப்பின் அறிக்கை வெளியிட்ட அமலாக்கத் துறை டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில் மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு டாஸ்மாக் வழக்கில் முதல் தகவல் அறிக்கை விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது டாஸ்மாக் ஊழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்கள் தலைமை அலுவலகத்தில் உள்ளதாகவும் டாஸ்மாக் முறைகேடு மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் உள்ளதாகக் கூறிய அமலாக்கத்துறை, குறிப்பிட்ட முறையில் தான் விசாரணை நடத்த வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் வாதிட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.