எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆயிரம் கோடி ரூபாய் மதுபான ஊழல் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது மதுபான ஊழல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால், சட்டப்பேரவை தலைவர் அனுமதி மறுத்தததால் பாஜக உறுப்பினர்கள் நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். ரூபாய் லட்சினையை மாற்றுவது என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறிய அவர், ரூபாய் சின்னத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரும் போதை அதை திமுக ஏன் எதிர்க்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். ஆட்சியின் ஊழல்களை மறைக்கவே மொழி மற்றும் ரூபாய் லட்சினை போன்ற பிரச்னைகளை திமுக எழுப்பி வருவதாகவும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திக்கிறது என அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருப்பதாக கூறினார். இதனால் ஆட்சியில் தொடர்வதற்கான தார்மீக உரிமையை திமுக அரசு இழந்துவிட்டதாக கூறிய அவர், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யவும் இந்த அரசுக்கு எந்த அருகதையும் இல்லை என்று குற்றம்சாட்டினார்.