எழுத்தின் அளவு: அ+ அ- அ
கன்னியாகுமரி மாவட்டத்தில் டெண்டர் எடுப்பதில் ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பு நிலவியது. திமுக கவுன்சிலர்களின் ஆதரவாளர்களாக இருக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஒதுக்க முயன்றதால் பேரூராட்சி அலுவலகத்தில் ஏற்பட்ட களேபரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே இடைக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி தலைவியாக உமாதேவி என்பவர் இருந்து வருகிறார். தற்போது பேரூராட்சியில் பணிகளை டெண்டர் எடுக்க 47 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரூராட்சி கூட்டம் நடந்தது. அதில் பேரூராட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள, 47 ஒப்பந்ததாரர்களுக்கும் சமஅளவில் வேலையை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்றும், இதனால் அனைத்து ஒப்பந்த்தாரர்களுக்கும் சம அளவில் பணி ஒப்பந்தம் கிடைக்கும் என்றும் பேசி முடிவு செய்யப்பட்டது. மேலும், ஏற்கனவே டெண்டர் எடுத்துள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த முறை முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பேரூராட்சி அலுவலகத்தில் டெண்டர் குறித்து அறிவிப்பு வாசிக்கப்பட்டு ஒப்பந்த மனுக்கள் பெறுவதற்காக பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது ஏற்கனவே டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள், தங்களுடைய மனைவி பெயரில் திமுக கவுன்சிலர்களின் ஆதரவோடு மீண்டும் டெண்டர் கோரியுள்ளனர்.
ஏற்கனவே டெண்டர் கிடைக்காமல் இருந்த ஒப்பந்ததாரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இதுவரை டெண்டர் கிடைக்காத ஒப்பந்ததாரர்களுக்கும், ஏற்கனவே டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்த சில திமுக கவுன்சிலர்கள், தங்களுடைய ஆதரவாளர்களான சில ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர்கள் கிடைக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறு முற்றி மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் அலுவலகத்தில் இருந்த டேபிள் மற்றும் கோப்புகள் சேதமடைந்தன.
இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. இதனிடையே, அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியதாக 8 பேர் மீது பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த மோதல் காரணமாக டெண்டர் கோரப்படவில்லை.
டெண்டர் எடுப்பது தொடர்பாக திமுக கவுன்சிலர்களின் ஆதரவு ஒப்பந்ததாரர்களும் மற்றொரு தரப்பினரும் பேரூராட்சி அலுவலகத்தில் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.