தகிக்கும் கோடை வெயில்... தர்பூசணியை நாடும் மக்கள்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோடை காலத்தின் தொடக்கத்திலேயே சுட்டெரித்து வரும் வெயிலால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். கொளுத்தி எடுக்கும் வெயிலில் இருந்து தப்பித்து, உடம்பை குளுகுளுவென்று வைத்துக்கொள்ள சாலையோர தர்பூசணிக் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது...

நான்கு காலங்களில் பொதுமக்களை மிகவும் அல்லல்பட வைப்பது கோடை காலம்தான்... சிறியவர்களுக்கு கோடை என்ற வார்த்தையை கேட்டால் ஐயா ஜாலி... அதுவே பெரியவர்களுக்கு வெயிலில் நாம காலி... என மனம் நொந்து கூறுவதே கோடை காலத்தின் மனநிலை..

அவ்வாறு கோடை காலத்தில் அவதியடையும் மக்களுக்காகவே, முருகப்பெருமான் அவ்வைக்கு வழங்கிய நெல்லிக்கனியை போன்று இயற்கையால் மனிதர்களுக்கு வழங்கியதே தர்பூசணி. இவற்றை அதிக அளவில் உண்ணுவதற்கான காரணம், தர்பூசணியில் சுமார் 6% சர்க்கரையும், 92% நீரும் உள்ளதால் அதனை உண்ணும் மக்களுக்கு அருமருந்தாக உள்ளது. 

தற்போது தினந்தோறும் அதிகரித்து வரும் வெயிலால், சென்னையில் பார்க்கும் திசையெல்லாம் தர்பூசணி கடைகள் உருவெடுத்துள்ளது. இவை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் இருந்தும் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை நிறம் என 1,200க்கும் மேற்பட்ட தர்பூசணி வகைகள் உள்ள நிலையில், காதலுக்கு எவ்வாறு சிவப்பு ரோஜாவோ, அதேபோல் கோடை என்றாலே மக்களின் மனம் கவர்ந்தது சிவப்பு நிற தர்பூசணியே. 

ஒரு கிலோ தர்பூசணி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாலும் ஏழை, எளிய மக்களின் விருப்பத்திற்குரியதாக தர்பூசணி உள்ளது. தற்போதே வெயில் தகித்து வரும் நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் தர்பூசணியின் விலை பன்மடங்கு உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். வாட்டி வதைக்கும் வெயிலிலிருந்து உடலை பாதுகாக்க தர்பூசணி போன்ற பழங்கள் அரு மருந்தாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். கொதிக்கும் கோடை காலத்தை தர்பூசணி துணையுடன் கடப்போம் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Night
Day