தந்தை மறைந்து விட்டார் என்பதை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை - "போய் வாருங்கள் அப்பா" - தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் பிறந்த குமரி அனந்தனுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சொளந்தராஜன் உட்பட 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியாக இருந்த குமரி அனந்தன் பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், நாகர்கோவில் தொகுதி எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். 

இதனிடையே குமரி அனந்தன் சிறுநீரக பிரச்சை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 4 ஆம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகளும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜனின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குமரி அனந்தனின் இறுதிச் சடங்கு விருகம்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தந்தை மறைந்து விட்டார் என்பதை தன்னால் இன்னும் நம்ப முடியவில்லை "போய் வாருங்கள் அப்பா" என தமிழிசை சௌந்தரராஜன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே குமரி அனந்தன் மறைவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மூத்த அரசியல் தலைவரும், பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் குமரி அனந்தன் என கூறியுள்ளார். அவர் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அண்ணாமலை, பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர் குமரி அனந்தன் என சுட்டிக்காட்டியுள்ளார். குமரி அனந்தனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார். 


Night
Day