எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து நாட்களுக்கு இயல்பைவிட அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்கள், உள்மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடதமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 39 டிகிரி செல்சியஸ் வரையும், கடலோரப்பகுதிகளில் 37 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகபட்ச வெப்பநிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் காற்றின் ஈரப்பதமும் ஓரளவு அதிகரிக்கக்கூடும் என்பதால், சில இடங்களில் அசௌகரியம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதால், இன்று தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.