எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் அக்னி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்து குளிர்வித்தது. இதனால் வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலத்தில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பழைய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, சீலநாயக்கன்பட்டி, மல்லூர், அயோத்தியபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்ததோடு, அனல் காற்று வீசிய நிலையில், திடீர் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழை காரணமாக தேயிலை உற்பத்தி அதிகம் இருக்கும் என தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை மழை பெய்தது. திண்டிவனம், மயிலம், கூட்டேரிப்பட்டு, மேல்பாக்கம், சாரம், ஒலக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்சியில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், கண்டோன்மென்ட் ஐயப்பன் கோவில் பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கியதால் பக்தர்கள் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். உரிய மழைநீர் வடிகால்களை அமைக்காததால் சிறிய மழைக்கே தண்ணீர் தேங்கும் அவல நிலை காணப்பட்டது.