எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் மூட்டை மூட்டையாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை வளாகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் சுமார் 24 மணி நேரத்திற்கு மேலாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல ஆயிரம்விளக்கு, தி.நகர் உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், துப்பாக்கி ஏந்திய ஆர்.பி.எப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபான கிடங்கு அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் செயல்பட்டு வரும் எம்.ஜி.எம் மதுபான நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதல் நடைபெற்று வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படும் என தகவல் வெளியானது.
இதேபோல கரூரில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நண்பர்களான கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி, சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக், அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை தொடங்கிய அமலாக்கத்துறை சோதனை சுமார் 12 மணி நேரம் வரை நடைபெற்றது. சோதனையின் முடிவில் அதிகாரிகள் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தெரிகிறது. இதில் மாயனூர் பகுதியில் உள்ள எம்.சி சங்கரின் தாய் தந்தையர் குடியிருக்கும் வீடு பூட்டிக் கிடந்ததால் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.எம் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான உற்பத்தி ஆலையிலும் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 4 பேர் கொண்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லா கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் ஆலைக்குள் இருந்து மதுபானங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் வெளியே செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்காததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.