எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் பிரானூர் பார்டர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், வணிக ரீதியான கடைகளுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் போராட்டம் நடத்தியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
சிவகங்கை அருகே உள்ள நாட்டாகுடி கிராமத்தில், கடந்த மூன்று தலைமுறைகளாக குடிநீர் வசதி இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும், அரசு பள்ளி, போக்குவரத்து வசதி போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், பலர் கிராமங்களை காலி செய்துவிட்டு வெளி ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் தற்போது அந்த கிராமத்தில் 35 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று உப்பாற்றில் ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட காலங்கரை பகுதியில் கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி பெண்கள் உள்ளிட்டோர் செங்கோட்டை நகராட்சி அலுவலகம் வாயில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
அரியலூரில் உள்ள சித்தேரியின் கரையை சமூக விரோதிகள் சிலர் உடைத்ததால் ஏராளமான தண்ணீர் வீணாகி வருகிறது. கோடை வெயில் காரணமாக ஏரியில் தண்ணீர் வற்றி குறைந்த அளவே உள்ள நிலையில், கரை உடைப்பால் மேலும் அதிக அளவில் தண்ணீர் வீணாகி வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, கரை உடைப்பை உடனடியாக சரி செய்வதோடு, ஏரி கரையை உடைத்த சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பு கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர். தகவலறிந்த வந்த போலீசார் மற்றும் பஞ்சாயத்து தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.