எழுத்தின் அளவு: அ+ அ- அ
மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் ரொக்கம், பரிசு உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்தும் வாகன சோதனையில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால், அவை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப் குமார் தெரிவித்தார். திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரதீப் குமார், தேர்தல் பறக்கும் படையினரால் நேற்று வரை 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 7 லட்சம் ரூபாய்க்கு உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதால் திரும்ப வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி அருகே அமைச்சர் எ.வ.வேலு காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ரிஷிவந்தியம் மாடாம்பூண்டி கூட்டு சாலையில் அமைச்சர் எ.வ. வேலு தேர்தல் பணி தொடர்பாக வந்தபோது அவரது காரை நிறுத்தி சோதனை நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புடவைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புடவைகள் மற்றும் மது பாட்டில்களை காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
தென்காசி மாவட்டம் வி.கே.புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 100 வெள்ளி மோதிரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குத்துக்கல்வலசை பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த அழகு சுந்தரம் என்பவரை நிறுத்தி அவரது பையை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் சுமார் 100 வெள்ளி மோதிரங்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மோதிரங்களையும், அதனுடன் இருந்த 10 ஆயிரம் ரூபாயையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தென்காசி வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.