எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை, தலைஞாயிறு, ஆதனூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக வேதாரண்யத்தில் 28.6 மில்லி மீட்டரும், கோடியக்கரையில் 10.2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல், கீழ்வேளூர், எட்டுக்குடி, திருப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில தினங்களாக கடும் வெயில் வாட்டிய நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரையோர பகுதிகளில் கனமழையும், உட்புற பகுதிகளில் விட்டு விட்டு பரவலான மழையும் பெய்து வரும் நிலையில், அறுவடை பணிகள் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருவதால் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரம் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகள், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். பலத்த காற்று வீசுவதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான பெருங்காலூர், முகையூர், சிவபுரி, வேலக்குடி, கடவாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. மழை காரணமாக அறுவடைக்கு தயாராக உள்ள உளுந்து பயிர் சேதமடையும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு, கொள்ளிடம், பூம்புகார், திருமுல்லைவாசல், பழையார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக நிலக்கடலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மழையினால் பாதிப்பு ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட திருநள்ளாறு, அம்பகரத்தூர், நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. மழை காரணமாக சாலைகள் பொதுமக்களின் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.