எழுத்தின் அளவு: அ+ அ- அ
ராமநாதபுரம், நெல்லை, நாகை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
ராமநாதபுரம் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால், பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனர்.
நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருக்குறுங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட மலைநம்பி கோவிலுக்கு, இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் சிற்றருவிகளில் குளிப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் பாதிகக்கப்பட்டுள்ளதால், உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் சூரங்குடி பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தாமிரபரணி கரையோரம் மற்றும் குளங்களில் பொதுமக்கள் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பள்ளி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டாரத்தில் உள்ள நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு, ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பெருக்கல் மற்றும் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல், வாழை, காய்கறி பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.