தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு 'ரெட் அலர்ட்'

எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இதனை தொடர்ந்து இலங்கை - வடதமிழக கடற்கரை நோக்கி நகரும் என்றும் தெரிவித்துள்ளது. நாகைக்கு 880 கிலோமீட்டர் கிழக்கு - தென்கிழக்கு மற்றும் சென்னைக்கு ஆயிரத்து 50 கிலோமீட்டர் கிழக்கு - தென்கிழக்கில் புயல்சின்னம் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல், புதுச்சேரிக்கும் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Night
Day