தமிழகத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதையொட்டி, சந்தைகளில் பூஜைக்கு தேவையான பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

ஆண்டுதோறும் ஆயுத பூஜையன்று தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல் பொதுமக்களும் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை இன்று கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஆயுத பூஜையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பூசணிக்காய், பொரி கடலை, பழங்கள், பூக்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பூஜைக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

நாகப்பட்டினம் பெரிய கடைவீதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது. நாகை பூ மார்க்கெட்டில் பூஜைக்கு தேவையான பூ, பழங்கள், பொரி போன்ற பொருட்கள் விற்பனை களைகட்டியது.  ஏராளமான மக்கள் சந்தைகளில் குவிந்து தங்களுக்கு தேவையான பழங்கள், தேங்காய், வாழை கன்றுகள், பொரி, சந்தனம், குங்குமம் ஆகியவற்றை வாங்கி சென்றனர்.

நாமக்கல் R.P. புதூர் பகுதிகளில் ஆயுத பூஜையை யொட்டி பொரி தயாரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு பொரி மூட்டையின் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவு விற்பனையானதாக பொரி வியாபாரிகள் என தெரிவித்தனர்.

திருச்சி பொன்மலையில் ஆயுத பூஜை முன்னிட்டு ரயில்வே ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு பொன்மலை பணிமனையை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது. அங்கு இயந்திரங்களுக்கு முன் பூஜைகள் செய்து,  நண்பர்களுடன் நடனமிட்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

கரூர் தேசிய நெடுஞ்சாலையான குட்டை கடை- ஈரோடு சாலையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சார்பாக மையில் கல்லுக்கு சந்தன பொட்டிட்டு, வண்ண மாலைகள் அணிவித்து, வாழைமரம் கட்டி, தேங்காய், பழத்துடன் பூஜை செய்தனர். தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை தாங்கள் பயன்படுத்தும் ஆயுதம் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு பூஜை செய்து கொண்டாடினர்.

Night
Day