எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதனால் நாளை தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கடுத்த இரு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் 17ம் தேதி நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வரும் 18ம் தேதி கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.