தமிழகத்தில் உச்சக்கட்ட தேர்தல் பரப்புரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் அரனாரை பழைய பேருந்து நிலையம், எளம்பலூர் சாலை, சங்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வரும் காலங்களில் ஏழை, எளிய மாணவர்களை படிக்க வைப்பதற்கும், மருத்துவ காப்பீடு மூலம் 10 லட்சம் ரூபாய் வரை உயர் சிகிச்சை பெறவும், நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றும் உறுதி அளித்தார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பாமக வேட்பாளர் கணேஷ்குமாரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுகவினர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 3 ஆண்டுகளில் துரும்பளவு கூட நிறைவேறப்படவில்லை என்றும், பல திட்டங்களை செய்வதாக கூறி எதையும் நிறைவேற்றாமல் ஏமாற்றியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காரையூர், சடையம்பட்டி, கல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தாமரை சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்தால் பாழடைந்து கிடக்கும் சுற்றுலா தலங்களை சீரமைத்து, அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்தார். 

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். பாண்டியன் நகரில் பிரசாரத்தின்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூரில் பனியன் துறை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

varient
Night
Day