எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில், வாக்காளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள பூதூர் கிராமத்தில் மத்திய இணை அமைச்சரும், பாஜக வேட்பாளருமான எல்.முருகன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு நின்றிருந்த ஆதி திராவிடர் காலனியை சேர்ந்த பெண்களிடம் பிரதமர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவை குறித்து தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தை ஆதரித்து நடிகை ரோகினி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தெய்வ சிகாமணிபுரம் பகுதியில் பேசிய அவர், சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு, விலையை முதலில் ஏற்றியது யார் என கேள்வி எழுப்பினார். இதற்கு எடுத்துக்காட்டாக, நடிகர் ரகுவரன் காதலன் திரைப்படத்தில் கூறுவது போல், இவர்களே குண்டு வைப்பார்களாம், அதனை இவர்களே எடுப்பார்களாம் என முதல்வன் படத்தின் வசனத்தை மாற்றி கூறி குழப்பத்தை ஏற்படுத்தினார்.
அரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பென்னகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கணேஷ்குமார், உணவகம் ஒன்றில் தோசை சமைத்து, தனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி உருளையன்பேட்டை தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அவர்களின் கல்விக் கட்டணங்களை அரசே செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணன், சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கேன்சர் சிகிச்சை மையம், விமான நிலையம் உள்ளிட்ட 10 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தார்.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து, திருப்பரங்குன்றத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திருப்பரங்குன்றம் கோயில் எதிரேவுள்ள டீக்கடையில் வடை சுட்டும், வடை விற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.